பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவருக்கு கொரோனா உறுதியானது

பிரிட்டனில் இருந்து வந்தவருக்கு கொரோனா... பிரிட்டனில் இருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் மரபியல் மாற்றமடைந்த வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் அந்நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரிட்டனில் மக்கள் அதிர்ச்சியில் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இந்த சூழலில் தற்போது பிரிட்டனிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அந்த நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை விமானநிலையத்தில் சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தனது குழுவினருடன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரிட்டனிலிருந்து டெல்லி வந்த 553 பேருக்கும் சோதனை செய்யப்பட்டது.

அதில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் கிங்க்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் அனைவருக்குமே ஆர்டி பிசிஆர் சோதனை எடுக்கப்பட்டு இன்றுவரை 96 மணி நேரத்திற்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர்.

கடந்த 10 நாட்களில் டெல்லி மற்றும் பிரிட்டனிலிருந்து வந்த அனைவரின் பெயர் பட்டியலும் எடுக்கப்பட்டு, அவர்களுக்கு சோதனை எடுக்கப்பட்டது. மேலும் அவர்களை மாநகராட்சி குழு ஒன்று கண்காணித்து வருகிறது எனவும் அவர் கூறினார்.

ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், தற்போது மீண்டும் வீரியமிக்க வைரஸ் பரவுகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால் தமிழக மக்கள் பீதியடைந்துள்ளனர்.