முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடக்கம்

சென்னை: இந்தியா முழுவதும் அரசு, தனியார்மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில்மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், டிப்ளமோ மற்றும் பல் மருத்துவப் பட்ட மேற்படிப்பான எம்டிஎஸ் போன்றவற்றுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்திய தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) இதை நடத்துகிறது. நாடுமுழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்தஇடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் இடங்கள் மற்றும்மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் மருத்துவக் கலந்தாய்வு குழு ஆன்லைனில் கலந்தாய்வு நடத்துகிறது.

எம்டி, எம்எஸ், டிப்ளமோ மற்றும் எம்டிஎஸ் படிப்புகளுக்கான 2023-24-ஆம் கல்வி ஆண்டு மாணவர்சேர்க்கைக்கான மாநில கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த 6-ம் தேதி தொடங்கி 17-ம்தேதி நிறைவடைந்தது. பரிசீலனைக்குப் பின், எம்டி, எம்எஸ், டிப்ளமோ படிப்புகளுக்கான அரசுஒதுக்கீட்டு இடங்களுக்கு 7,526 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 3,036 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தரவரிசைப் பட்டியல்: எம்டிஎஸ் படிப்புக்கான அரசுஒதுக்கீட்டு இடங்களுக்கு 661 விண்ணப்பங்கள், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 336 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதையடுத்து ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு https://www.tnhealth.tn.gov.in/, https://tnmedicalselection.net/ ஆகிய சுகாதாரத் துறை இணையதளங்களில் வருகிற 7-ஆம் தேதி தொடங்குகிறது.