ஊரடங்கால் வருமானம் குறைந்தது... 1400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஓலா நிறுவனம் முடிவு

ஊரடங்கின் காரணமாக வருவாய் குறைந்ததால் வாடகை கார் நிறுவனமான ஓலா தனது 1,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது.

இதுகுறித்து நிறுவன தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பியுள்ளார். அதில் 'ஊரடங்கின் காரணமாக ஓலா நிறுவனத்திற்கு வருவாய் 95 சதவீதம் குறைந்து விட்டது.

கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதால் இதன் தாக்கம் நீண்ட நாட்களுக்கு இருக்கும். பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு மூன்று மாத அடிப்படை சம்பளம் வழங்கப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் புதிய வேலை கிடைக்கும் வரை அல்லது நடப்பு ஆண்டு இறுதி வரை மருத்துவம், ஆயுள், விபத்து காப்பீடுகளை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.