போயஸ் கார்டன் சாவியை கொடுக்குமாறு தீபக் புது வழக்கு

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளாக அவரது அண்ணன் மகன் ஜெ.தீபக், ஜெ.தீபா ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு வழங்கியது. இந்நிலையில் கடந்த சில நாட்கள் முன்பு ஜெ.தீபக் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டன் சென்று வீட்டை பார்வையிட அங்குள்ள போலீசாரிடம் கேட்டார். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால் திரும்பி சென்றார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை கையகப்படுத்துவது குறித்த விசாரணையை கைவிடக்கோரி அவரது அண்ணன் மகன் தீபக், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தங்களை ஜெயலலிதாவின் வாரிசுகள் என உயர் நீதிமன்றம் அறிவித்த நிலையில், விசாரணையை கைவிட்டு, சாவியை தன்னிடம் தருமாறு தீபக் மனுவில் கோரப்பட்டுள்ளது.

அதில், தனது பாட்டி சந்தியா போயஸ் தோட்ட வீட்டை வாங்கினார் என்றும், நினைவில்லம் அமைப்பது தொடர்பாக தான் மற்றும் தனது சகோதரி தீபாவின் ஆட்சேபங்களை பரிசீலிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த், இருவேறு தீர்ப்புகள் வருவதை தவிர்க்கும் வகையில், இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாக தெரிவித்தார். இதன்படி, வழக்கு நீதிபதி கிருபாகரன் அமர்வில் நிலுவையில் உள்ள வழக்குடன் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.