கொரோனாவால் பாதிக்கப்படும் விமான பயணிகளின் சிகிச்சைக்கான செலவை ஏற்பதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் குறைந்த அளவிலான விமானங்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும் கொரோனா அச்சம் காரணமாக பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

தற்போது விமான பயணத்தின்போது கொரோனாவால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு சிகிச்சைக்கான செலவை ஏற்பதாக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு மருத்துவ செலவாக 1.3 கோடி ரூபாய் வரை வழங்கப்படும் எனவும், தனிமைப்படுத்தப்படும் 14 நாட்களுக்கும் தினசரி 8,691 ரூபாய் வழங்கப்படும் எனவும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த சலுகை அக்டோபர் 31, 2020 வரை எமிரேட்ஸ் விமானத்தில் பறக்கும் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும், விமானத்தில் புறப்பட்ட நாளில் இருந்து 31 நாட்களுக்கு இது செல்லுபடியாகும் எனவும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் கூறியுள்ளது.

பயணத்தின் போது கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் உதவி மற்றும் பாதுகாப்பு பெற ஒரு பிரத்யேக ஹாட்லைனை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும், இந்த மருத்துவ செலவை கோர விரும்பும் வாடிக்கையாளர்கள் மேலும் விவரங்களை எமிரேட்ஸ் இணையதளத்தில் காணலாம் என்றும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.