பேச்சுவார்த்தையின்போது தேவையான உணவு மற்றும் குடிநீரை தாங்களாகவே கொண்டுவந்த விவசாயிகள்

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 10-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் இறுதியில் டெல்லியில் போராட்டம் நடத்தும் நோக்கில் வந்த விவசாயிகள் அரியானா எல்லையில் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதன்பின் நிலையை தீவிரமடைந்ததையடுத்து, விவசாயிகள் டெல்லிக்குள் செல்ல போலீசார் அனுமதி வழங்கினர். மேலும், டெல்லியில் உள்ள புராரி மைதானத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். ஆனால், அரியானா - டெல்லி எல்லையான சிங்கு மற்றும் டிக்ரியில் பகுதியிலேயே விவசாயிகள் தொடர்ந்து 10-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேச-டெல்லி எல்லையிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போராட்டம் தொடர்பாக மத்திய அரசு மற்றும் விவசாய குழுக்கள் இடையே ஏற்கனவே 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியடைந்தது. தொடர்ந்து இன்று 5-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ள விவசாய குழுக்களின் தலைவர்களுக்கு மத்திய அரசு உணவு மற்றும் குடிநீர் போன்ற அத்தியாவசிய வசதிகளை ஏற்பாடு செய்திருந்தது.

ஆனால், மத்திய அரசு வழங்கிய உணவு மற்றும் குடிநீரை விவசாய குழு தலைவர்கள் ஏற்கமறுத்துவிட்டனர். மேலும், தங்களுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீரை தாங்களாகவே கொண்டுவந்துள்ளனர். கூட்டத்தில் உணவு இடைவெளையின் போது விவசாயிகள் தாங்கள் கொண்டுவந்த உணவை பகிர்ந்து குழுவாக இணைந்து உட்கொண்டனர். மேலும், அரசு தரப்பில் இருந்து வழங்கப்பட்ட குடிநீர், தேநீர் என எந்த உபசரிப்பையும் விவசாயிகள் ஏற்றுகொள்ளவில்லை.