டீசல் விலை உயர்வை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற போராட்டம்

ராமேசுவரத்தில் இருந்து சுமார் 820 விசைப்படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக இவர்கள் பிடித்து வரும் மீன்களுக்கு போதிய விலை இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும் டீசல் விலை உயர்வால் மீன்பிடி தொழில் சார்ந்த பொருட்களின் விலையும் உயர்ந்து இருப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்து வந்தனர்.

இந்த சூழலில் ராமேசுவரம் துறைமுகத்தில் மீனவர் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்தில் டீசலை உற்பத்தி விலைக்கே மத்திய-மாநில அரசுகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீன்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி விசைப்படகு மீனவர்கள் இன்று காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர்.

இதனால் விசைப்படகுகள் துறைமுகப் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன. மீனவர்கள் போராட்டம் தொடர்ந்தால் மீன் விலை உயர வாய்ப்புகள் உள்ளன.