பிளாஸ்டிக் கழிவுகளை கொடுங்க... சாப்பிட்டு விட்டு போங்க

குஜராத்: பிளாஸ்டிக் கழிவுகளை கொடுத்து அந்த மதிப்புக்கு ஏற்றவாறு சாப்பிடலாம் என்று ஓட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உணவகங்களுக்குச் சென்றால் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்க வேண்டும். பணம் இல்லாவிட்டால் மாவு ஆட்ட வேண்டும் என்று காமெடிகள் வரும். ஆனால், ஓர் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, பணமோ, சப்ளையர்களுக்கு டிப்ஸோ தரத் தேவையில்லை. பிளாஸ்டிக் கழிவுகளைக் கொடுத்துவிட்டு, அதற்கான ரூபாய் மதிப்புக்கேற்றவாறு சாப்பிட்டுவிட்டு திரும்பலாம்.

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு ஜூலை 1 முதல் நாடு முழுவதும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில்,, இந்த வித்தியாசமான உணவகம் குஜராத்தில் ஜுனாகட் நகரில் ஜூன் 30-ஆம் தேதி முதல் மாவட்ட நிர்வாகத்தின்ஆலோசனையின்படி தொடங்கப்பட்டுள்ளது. சர்வோதய் சாகி மண்டல்' என்கிற அமைப்பானது விவசாயிகள், பெண்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களின் உதவி ஒத்துழைப்புடன் இந்த உணவகத்தை நடத்திவருகிறது.

பிளாஸ்டிக் கழிவுகளால் உலக நாடுகளின் நிலம், கடல் மாசு அடைந்துள்ளது. பொறுப்பற்ற விதத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது உலகமெங்கும் பெருகிவருகிறது. எல்லா பிளாஸ்டிக் கழிவுகளையும் மறுசுழற்சி செய்ய முடியாது. இதுதவிர, பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யப்படுவதே மிகக் குறைவுதான். அதனால் பிளாஸ்டிக் கழிவுகள் உலகமெங்கும் நாள்தோறும் டன் கணக்கில் பெருகி பரவி வருகின்றன.

வீடுகள், கடைகளில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை இந்த உணவகத்துக்குக் கொண்டு வந்து எடை போட்டு எடைக்குத் தகுந்தவாறு ஒரு விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்தப் பணத்துக்கு ஈடாக உணவு ஐட்டங்களை வாங்கிக் கொள்ளலாம். அங்கேயே சாப்பிடலாம். பொட்டலமாகவும் உணவு வகைகளை வாங்கிக் கொண்டு செல்லலாம்.

இதுகுறித்து உணவகப் பொறுப்பாளர்கள் கூறியதாவது: ஜுனாகட் மாவட்டத்தை தூய்மையாக வைத்திருக்கவும், பசுமையான பகுதியாக மாற்றவும் இந்த உணவு விடுதி தொடங்கப்பட்டுள்ளது. உணவு விடுதியில் இயற்கை உரம் இடப்பட்டு, அதில் விளையும் காய்கறிகளைப் பயன்படுத்துகிறோம். உணவுவிடுதியில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சிக்காகக் கொண்டு செல்லும் பொறுப்பை தனியாரிடம் மாவட்ட ஆட்சியரகம் ஒப்படைத்திருக்கிறது.

அரை கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுக்கு ஒரு கிளாஸ் எலுமிச்சை ஜூஸ் இலவசம். ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுக்கு ஒரு பிளேட் போஹா அல்லது தோக்ளா உண்டு. பேரீச்சம்பழம் , அத்திப்பழம், ரோஜா, வெற்றிலைகள் என இயற்கை உணவுகளால் கலந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளை மண்பாத்திரங்களில் பரிமாறுகின்றனர். குஜராத்தி மதிய உணவும் உண்டு'' என்றார்.