தொடர் மழையால் நிலக்கடலை சாகுபடி செழிப்பாக வளர்ந்தது; விவசாயிகள் மகிழ்ச்சி

விவசாயிகள் மகிழ்ச்சி... சத்தியமங்கலம் மற்றும் புன்செய் புளியம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழையால், நிலக்கடலை சாகுபடி நன்கு செழித்து வளர்ந்துள்ளது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் புன்செய் புளியம்பட்டி, பவானிசாகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் பருவமழை சில நாட்கள் பெய்தது. இதை பயன்படுத்தி விவசாயிகள் நிலக்கடலை சாகுபடியை தொடங்கினர்.

பொதுவாக நிலக்கடலை நான்கு மாதம் பயிர் என்பதால் நிலக்கடலை சாகுபடியை பொறுத்தவரை 20 நாட்களுக்கு ஒரு முறை மழை பெய்தால் விளைச்சல் அதிகரிக்கும். மழை குறைந்தால் சாகுபடி பாதித்து அறுவடையில் தாமதம் ஏற்பட்டு விளைச்சலும் குறையும்.

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக பெரிய அளவு மழை பெய்யாததால் விவசாயிகள் கவலையடைந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் தற்போது நிலக்கடலை செடிகள் நன்கு செழித்து வளர்ந்துள்ளது.
இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் நிலக்கடலை சாகுபடியால் நல்ல வருமானம் கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்.