ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக சரிவு

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணை, கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் உபரி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட் டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது.

இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட் டது. நேற்றுமுன்தினம் நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

மேலும் காவிரி கரையோர பகுதிகளான ஒகேனக்கல், சத்திரம், நாடார் கொட்டாய் பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் சூழ்ந்தது. இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நேற்று முதல் படிப்படியாக நீர்வரத்து குறைய தொடங்கியது. நேற்று நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு 65 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இன்று காலை கிருஷ்ண ராஜசாகர் அணையில் இருந்து 29,970 கன அடி நீரும், கபினி அணையில் இருந்து 17,479 கன அடி நீரும் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி தண்ணீராக குறைந்தது. தற்போது பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் முகாமிட்டு நீர்வரத்தை கண்காணித்து வருகிறார்கள்.