பீகாரின் புதிய அரசில் மந்திரி பதவி எதுவும் எனக்கு வேண்டாம் - முன்னாள் முதல்-மந்திரி மஞ்சி

பீகாரில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவில், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதனால் ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ளார். இந்த கூட்டணி சார்பில் தேர்தலில் முன்னாள் முதல்-மந்திரி ஜித்தன்ராம் மஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி போட்டியிட்டது.

இதில் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி 4 இடங்களை வென்றது. இந்த 4 எம்.எல்.ஏ.க்களும் நேற்று மஞ்சியின் இல்லத்தில் கூடினர். அப்போது கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக மஞ்சியை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.

இந்த கூட்டத்திற்கு பின் மஞ்சி பேட்டி அளிக்கையில், பீகாரின் புதிய அரசில் மந்திரி பதவி எதுவும் தனக்கு வேண்டாம் எனவும், அதை ஏற்க மாட்டேன் எனவும் கூறினார். மேலும் நிதிஷ்குமாரின் வளர்ச்சி திட்டங்களுக்கும், காங்கிரசின் திட்டங்களுக்கும் வேறுபாடு எதுவும் இல்லை என தெரிவித்தார்.

மேலும் அவர், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வேண்டும் என அழைப்பு விடுத்தார். பீகாரில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக கட்சி ஐக்கிய ஜனதாதள கட்சியை விட அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது.