வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால் ஏழைகளின் வாழ்க்கை தரம் உயரவேண்டும் - பிரதமர் மோடி

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் மத்தியபிரதேச மாநிலத்தில் கிராமப்புற பகுதிகளில் 1 லட்சத்து 75 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த வீடுகளை பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர், இந்தியாவில் வறுமையை ஒழிக்க வேண்டும் என்றால் ஏழைகளின் வாழ்க்கை தரம் உயரவேண்டும். அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவேண்டும். அந்த நோக்கத்தில்தான் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவல் இருக்கும் இந்த காலகட்டத்தில் நாடு முழுவதும் இந்த திட்டத்தின் கீழ் 18 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வெளிமாநிலங்களில் இருந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினார்கள். இந்த காலகட்டத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை மேம்படுத்துதல், வீடுகள் கட்டுதல் போன்ற பணிகளுக்காக ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.23 ஆயிரம் கோடி செலவிட்டு உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

மேலும் அவர், சொந்த மாநிலங்களுக்கு திரும்பிய தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும், இதனால் குறுகிய காலத்தில் வீடுகளை கட்ட முடிந்தது. மேலும் இந்த திட்டம் கிராமப்புற பொருளாரம் மேம்படவும் உதவியாக இருந்ததாகவும் அவர் கூறினார்.