அரசுப்பள்ளிகளில் +1, +2 வகுப்பில் குறைவான மாணவர்கள் இருந்தால் அருகில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருந்ததால் ஆசிரியர்கள் பற்றாகுறை ஏற்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும் அரசுப் பள்ளிகளில் 11, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் குறைவாக இருந்தாலும் அவர்களுக்கு தனி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதால், தேவை இருப்பவர்களுக்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்படுகிறது.

அதனால் தொடக்கக் கல்வித்துறை சார்பில் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதில் 45 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட படிக்கவில்லை என தகவல் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசின் விதிமுறைகளின்படி மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளியில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள வேறு பள்ளியில் சேர்க்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே அந்த வகையில் அரசுப்பள்ளிகளில் +1, +2 வகுப்பில் குறைவான மாணவர்கள் இருந்தால் அருகில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மேலும் அந்த பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதை அடுத்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் 30-க்கும் குறைவான, ஊரகப் பகுதிகளில் 15-க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் மாற்றலாம் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அவ்வாறு மாணவர்கள் மாற்றம் செய்யும் போது 2 பள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் குறிப்பிடும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.