பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 674 பேர் பலி

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பிரேசிலில் 674 பேர் பலியாகி உள்ளதால் மக்கள் மத்தியில் பீதி எழுந்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரேசிலில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 674 பேர் பலியாகியுள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,54,220 ஆக அதிகரித்தது. பலியானவர்களின் எண்ணிக்கை 16,853 ஆக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் பிரேசில் 4 வது இடத்தில் உள்ளது. நோய் தொற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அந்நாட்டின் அதிபர் போல்சனாரோ பாதிப்புகளை மிக அலட்சியமாக கையாண்டு வருகிறார் என விமர்சனத்திற்குள்ளாகி உள்ளார். இந்த நிலையில் பிரேசிலில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக அதிபர் போல்சனாரோவுக்கும் சுகாதாரத்துறை நிபுணர்களுக்கும் இடையே தொடர்ச்சியாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.