கர்நாடகத்தில் ஒரே நாளில் 4,169 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தற்போது அசுரவேகத்தில் பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை 46 ஆயிரத்து 318 பேர் கர்நாடகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 935 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்வால் அங்குள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கொரோனா பரவலால் பெங்களூரு உள்பட 7 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பெங்களூரு நகரில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், கர்நாடகத்தில் புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 104 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 4,169 பேர் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதால், அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,487 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 19,729 பேர் மீண்டுள்ளனர்.

தற்போது மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்து 655 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெங்களூருவில் கொரோனா பாதிப்பு மட்டும் 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மேலும், பெங்களூருவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் ஒட்டு மொத்தமாக 508 ஆக உயர்ந்துள்ளது.