மதுரையில் ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் பரவலாக கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் மதுரையில் நேற்று புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 23 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 374 ஆக உயர்ந்துள்ளது. மேலும் மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 46 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதில் 33 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

இவர்களுடன் சேர்த்து மதுரையில் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 685 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர 239 பேர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 67 வயது முதியவர் நேற்று உயிரிழந்தார். இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது.

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் ஒருவருக்கு சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவருடன் விடுதியில் தங்கியிருந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மேலும் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்த நிலையில் நேற்றும் ஒரு மருத்துவ மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று பரவி வருவது மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.