திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 486 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. 3 ஆயிரத்து 571 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 95,857 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கியது. திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 9 பேர், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பூவலம்பேடு கிராமத்தில் வட்டார மருத்துவர் டாக்டர் கோவிந்தராஜ் தலைமையில் கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டது. 301 பேருக்கு நடத்திய சோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று மட்டும் கும்மிடிப்பூண்டி தாலுகாவில் மொத்தம் 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 486 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 12 ஆயிரத்து 806 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 8,411 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 4,173 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 8 பேர் இறந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது.