எல்லை பிரச்சனையை தீர்க்க இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - போரிஸ் ஜான்சன்

லடாக் எல்லையில் கடந்த 15-ஆம் தேதி இந்திய-சீன ராணுவத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் சீன தரப்பில் 35 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த மோதலால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவியது. மேலும் இருநாடுகள் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.

அதன்பின் இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாடுகள் இடையே நடைபெற்ற மோதல் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்கா,ரஷ்யா போன்ற நாடுகள் இந்திய வீரர்களின் மரணத்திற்கு இரங்கலை தெரிவித்தன. தற்போது பேச்சுவார்த்தையின் முடிவில் எல்லையில் இருந்து சீன படைகள் விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில், இந்தியா-சீனா இடையிலான மோதல் குறித்து பழமைவாத கட்சி உறுப்பினர் பிலிக் டிரம்மண்ட் கேள்வி எழுப்பினார். இந்த மோதலால் இங்கிலாந்து நலனுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், லடாக்கில் உள்ள சூழ்நிலை மிகவும் தீவிரமான, கவலைக்குரிய அம்சமாகும். இதை இங்கிலாந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. எல்லை பிரச்சனையை தீர்க்க இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்துவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்று கூறினார்.