இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு தார்மீக உரிமை இல்லை

இந்தியாவிற்கு உரிமை இல்லை... அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு கேட்பதற்கு இந்தியாவுக்கு தார்மீக உரிமை இல்லை என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற, இலங்கையின் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் தொடர்பாக சபையை ஒத்திவைக்கும் நேரத்தில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது:

“இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 13ஆவது திருத்தத்தை இந்த நாட்டின் உள்ளக விவகாரம் என்று கவனிக்காமல், 13 வது திருத்தத்தை செயற்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இந்தியா தனது அரசியலமைப்பிலிருந்து 370வது பிரிவை இரத்து செய்வது குறித்து வெளிநாட்டு அரசாங்கங்கள் மோசமாக கருத்து தெரிவித்தபோதும், அங்குள்ள சிக்கலான ஜம்மு- காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா இரத்து செய்ததாக குற்றம் சாட்டியபோதும், ​​நமது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கருத்து கேட்கும்போது, ​​இது இந்தியாவின் உள்ளக விவகாரம் என கூறினார்.

13 ஆவது திருத்தம், இலங்கையின் உள்ளக விவகாரம் என்பதை அறிந்த பிரதமர் மோடி, அதை செயற்படுத்தக் கேட்பது ஏற்புடையதல்ல. இந்தோ-லங்கா உடன்படிக்கையின் ஆணைப்படி பிரதமர் மோடி அவ்வாறு கேட்கிறார் என்று சிலர் விளக்குகிறார்கள். இந்தோ-லங்கா ஒப்பந்தத்தில் இந்தியா தனது சொந்த உறுதிப்பாட்டை உண்மையாக கடைபிடிக்கிறதா என்ற கேள்வியை அது எழுப்புகிறது.

13யை ஒப்பந்தத்தில் கூட குறிப்பிடப்படவில்லை. இந்த ஒப்பந்தம் இந்தியாவால் நம்மீது கட்டாயப்படுத்தப்பட்ட ஒன்று. மேலும், 48 மணி நேரத்திற்குள் வன்முறையை நிறுத்துவதையும் இலங்கையிலுள்ள பயங்கரவாத குழுக்களின் அனைத்து ஆயுதங்களும் அதிகாரிகளிடம் சரணடைவதை உறுதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா உறுதியளித்தது. எல்.டி.டி., சில துப்பாக்கிகளை சம்பிரதாயத்தின் அடிப்படையில் ஒப்படைத்ததால் இது ஒரு அடையாளமாக மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.

ஆனால் விரோதங்கள் நிறுத்தப்படவில்லை. உலகின் மிகப்பெரிய படைகளில் ஒன்றான இந்திய இராணுவத்தின் ஐ.பி.கே.எஃப் கூட பலத்த உயிரிழப்புகளுடன் இந்தியா திரும்ப வேண்டியிருந்தது. சரியான அரசியல் தலைமையின் கீழ் இருந்த இலங்கை படைகளினாலேயே புலிகளை தோற்கடிக்க முடிந்தது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா தனது பங்கை நிறைவேற்றவில்லை.

குறித்த ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டதா, அல்லது ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் இலங்கையின் இறையாண்மையை சமரசம் செய்ததா என்ற கேள்வியும் எழுகிறது. இதேவேளை, உடன்படிக்கையின் உட்பிரிவுகளில் ஒன்றான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இணைப்பதை இலங்கை நீதிமன்றங்கள் இரத்து செய்துள்ளன. அத்துடன் நமது உள்ளக விவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு தார்மீக உரிமை இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.