இந்தியாவில் மீண்டும் ஓர் இனக்கலவரத்தை உருவாக்க பாஜ முயற்சிக்கிறது என குற்றச்சாட்டு

சிதம்பரம்: பாரதிய ஜனதா இந்தியாவில் மீண்டும் ஓர் இனக் கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தியவர்களை கண்டித்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக சிதம்பரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி சிதம்பரம் வந்தார். நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, பாரதிய ஜனதா இந்தியாவில் மீண்டும் ஓர் இனக் கலவரத்தை உருவாக்க முயற்சிக்கிறது. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது இனக்கலவரம் வந்தது.


அதில் 2 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள். அந்த 2 ஆயிரம் பேரும் இஸ்லாமியர்கள்தான். அதற்கு காரணம் யார் என்பதே தெரியாமல் போய்விட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையானார்கள். நீதிமன்றங்களை பார்த்து கேள்வி கேட்கிறேன். அப்படி என்றால் அந்த இரண்டாயிரம் பேரை கொலை செய்தவர்கள் யார்?


நம்முடைய நீதி பரிபாலனத்தில் அதுபோல் ஒரு நீதி முறை கிடையாது. இருந்தாலும் நாட்டினுடைய நலன் கருதி சாதாரண மக்களின் கேள்விகளுக்கு இந்த அரசு பதில் சொல்ல வேண்டும். நாட்டில் ஏறக்குறைய 35 கோடி சிறுபான்மை மக்கள் வாழ்கின்றார்கள். 25 கோடி தலித்துகள் இருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் இந்தியாவை ஆட்சி செய்துவிட முடியுமா?

ஆனால் இன்று ஆளும் அரசு ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே இறைவழிபாடு என்கிறது. இது எப்படி சாத்தியமாகும். பல நாடுகளை உள்ளடக்கிய ஒரு தேசம்தான் இந்தியா. பாரதிய ஜனதாவின் செய்தி தொடர்பாளர் முகமது நபியையும் விமர்சித்திருக்கிறார். முகமது நபியைப் பற்றி அந்த மதத்தைச் சாராத ஒருவர் எப்படி விமர்சிக்கலாம். அப்படி விமர்சித்தால் கலவரம்தானே ஏற்படும்.

மக்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்படத்தான் செய்யும். மக்கள் இதனால் பிளவுபட்டுதான் இருப்பார்கள். அதுதான் அவர்களது நோக்கம். மீண்டும் ஒரு குஜராத் கலவரத்தை உருவாக்குவதே அவர்களது நோக்கமாக. இது அவர்களுடைய கருத்தாக இல்லை. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பி.ஜே.பி.யின் கருத்து என்னவோ அதுவாகத் தான் உள்ளது. ஒரு கட்சியின் செய்தி தொடர்பாளர் அவர்களது கட்சியின் கருத்து குறித்து மட்டும்தான் தெரிவிக்க முடியும்.

அதனால் அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். நாட்டில் இனக் கலவரத்தை உருவாக்க நினைப்பவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில்தான் கைது செய்ய வேண்டும் என்றார். சிதம்பரம் நடராஜரை சமூக வலைத்தளத்தில் இழிவுபடுத்தியது குறித்த கேள்விக்கு பதிலளித்த கே. எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சி இந்து கடவுள்கள் மீதும் இந்து மதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டது. காங்கிரஸ் கட்சியில் மத நம்பிக்கை இல்லாத சில தனி நபர்கள் இருந்திருக்கலாம்.

யாரும் அவர்களுடைய கொள்கைகளை சொல்லலாம். ஆனால் யாரையும் கொச்சைப்படுத்த கூடாது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதில் நாங்கள் உறுதியாக இருப்போம். எனவே சிதம்பரம் நடராஜரை பற்றி தவறாக பேசியவர்களை கண்டித்து தேவைப்பட்டால் காங்கிரஸ் கட்சி போராடும் என்றார்.

அ.தி.மு.க. பற்றிய கேள்விக்கு பதிலளித்த கே.எஸ். அழகிரி, பாரதிய ஜனதாவின் அடிமையாக கட்சியாக மாறிவிட்டது இதை நாங்கள் சொல்லியபோது அரசியலுக்காக பேசுகிறோம் என்றார்கள், ஆனால் சமீபத்தில் ஓபிஎஸ் கூறும்போது, பிரதமர் சொன்னதால்தான் நான் துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டேன் என கூறியுள்ளார்.

அ.தி.மு.க.வில் யார் முதல்வராக இருக்க வேண்டும் யார் துணை முதல்வராக இருக்க வேண்டும் என்பதையே பாரதிய ஜனதாதான் முடிவு செய்கிறது என்ற போது இதைவிடவா அவர்களுக்கு வேறு இழிநிலை வேண்டும் என்றார்.