திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை இருமடங்கு உயர்வு

திண்டுக்கல் பூ மார்க்கெட்டுக்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பூக்கள் வரத்தை பொறுத்து தினமும் விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மல்லிகைப்பூ கிலோ ரூ.1000 முதல் ரூ.1,200 வரையில் விற்பனை ஆனது.

இந்நிலையில் மல்லிகைப்பூ விலை இருமடங்கு அதிகரித்து கிலோ ரூ.2,500-க்கு நேற்று விற்பனை ஆனது. இதுகுறித்து பூ வியாபாரி ஒருவர் கூறும்போது, தற்போது இரவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் பூக்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்துள்ளது.

இதன் எதிரொலியாக, பூக்களின் விலை 'கிடுகிடு'வென உயர்ந்துள்ளது. வரத்து குறையும் பட்சத்தில் இனி வரும் நாட்களில் பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.

பூ மார்க்கெட்டில்(விலை கிலோவில்) ஜாதிப்பூ ரூ.1,500-க்கும், முல்லைப்பூ ரூ.1,000-க்கும் நேற்று விற்பனையானது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட பல பகுதிப்பகுதிகளில் மல்லிகை பூக்களின் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.