கொரோனா பாதிப்பு இல்லாத இடமாக மாறிய கொடைக்கானல் மலைப்பகுதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கை காரணமாக பல மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை. அந்தவகையில் தற்போது கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 3 வாரங்களில் யாருக்கும் புதிதாக தொற்று ஏற்படவில்லை.

கடந்த 6 நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மலைக்கிராமங்களில் உள்ள பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கினர். மழை காலத்தில் நோய் தொற்றுகள் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பதற்காக 8 மருத்துவக்குழுக்கள் மருத்துவ முகாம் நடத்தி வருகின்றன. இதுவரை மேல்மலை மற்றும் கீழ்மலை பகுதியில் உள்ள கிராமங்களில் அவர்கள் முகாம் நடத்தி, பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

இதில் பொதுமக்களுக்கு எந்தவித நோய் தொற்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் பொதுமக்களுக்கு தேவையான முக கவசம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது.

இதுபோன்று, இதுவரை 40-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெற்றது. இதில், கொரோனா தொற்று, காய்ச்சல் பாதிப்பு யாருக்கும் இல்லை. கடந்த ஒருமாத காலத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒரு நபருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கடந்த 3 வாரங்களில் யாருக்கும் புதிதாக தொற்று ஏற்படவில்லை.