நேபாளத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து அவதியடைந்து வருகின்றனர். பல்வேறு நாடுகள் கொரோனா காரணமாக மிகுந்த பாதிப்பை அடைந்துள்ளன.

இந்நிலையில் உலகின் பல பகுதிகளில் இயற்கை பேரிடர்களால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். நிலச்சரிவு, கனமழை, வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பல இயற்கை பேரிடர்களால் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில் நேபாளத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் கனமழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவுகளும் ஏற்படுகின்றன.

கனமழை காரணமாக சிந்துபால்சவுக் மாவட்டத்தில் நேற்று இரவு திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மலை அடிவாரத்தில் உள்ள 18 வீடுகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டன. அந்த வீடுகளில் வசித்த 12-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

இதுகுறித்து மீட்புப்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புக்குழுவினர் முகாமிட்டு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த நிலச்சரிவில் உயிரிழந்த மற்றும் மீட்கப்பட்டவர்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.