நாளை முதல் மெரினாவுக்கு செல்லலாம்; பச்சைக் கொடி காட்டியது அரசு

நாளை முதல் மெரினா செல்லலாம்... கொரோனா ஊரடங்கால் தடை விதிக்கப்பட்ட மெரினா கடற்கரைக்கு 8 மாதங்களுக்கு பின் நாளை முதல் பொது மக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டில் மீனவர் நலச்சங்கம் சார்பில் வந்த வழக்கு ஒன்றில், மெரினா கடற்கரை எப்போது திறக்கப்படும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு திறக்கவில்லை என்றால், ஐகோர்ட் திறக்க உத்தரவிடும் என்றும் எச்சரித்தனர்.

இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் மெரினா கடற்கரையை டிசம்பர் 14ந் தேதி திறக்க அரசு திட்டமிட்டு இருப்பதாக கோர்ட்டில் தெரிவித்தார்.

இதையடுத்து முதல்வர் பழனிசாமி கடந்த மாதம் 30ந்தேதி வெளியிட்ட அறிக்கையில், 'நோய்த்தொற்றின் நிலவரத்துக்கு ஏற்ப நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 14ந் தேதி (நாளை) முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்' என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி, 8 மாதங்களுக்கு பிறகு சென்னை மெரினா உள்பட கடற்கரைகளில் பொதுமக்கள் செல்வதற்கு நாளை முதல் அனுமதி அளிக்கப்பட உள்ளது.