மதுரைக்குட்பட்ட பகுதியில் ரயில் இன்ஜின் ஓட்டுநர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிய தடை

மதுரை: தடை விதிப்பு... மதுரைக்குட்பட்ட பகுதியில் ரயில் இன்ஜின் ஓட்டுநர்கள், ரயிலை இயக்கும்போது ஸ்மார்ட் வாட்ச் அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஒடிசாவில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான சம்பவம் இந்தியாவையே சோகத்தில் மூழ்கடித்தது. இந்த சம்பவத்திற்குப் பிறகு இந்தியா முழுவதிலும் உள்ள ரயில் கோட்ட அலுவலகங்களுக்கு, ரயில்கள் பாதுகாப்பாக இயங்குவதற்குண்டான நடவடிக்கைகளை எடுக்கச்சொல்லி உத்தரவிட்டது ரயில்வே அமைச்சகம். எனவே ரயில்வே கோட்ட அலுவலகங்கள் சார்பில் ரயில் போக்குவரத்து குறித்து கண்காணிப்பு நடத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோட்ட அலுவலகங்கள் சார்பில் நடத்தப்பட்ட கண்காணிப்பில், பல ரயில் ஓட்டுநர்கள் கையில் ஸ்மார்ட் வாட்ச் அணிந்திருப்பது கவனிக்கப்பட்டது. இது குறித்து நடந்த விசாரணையில் ஏன் ஓட்டுநர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிகிறார்கள் என்பது பற்றிய திடுக்கிடும் உண்மை தெரிய வந்துள்ளது.

அதாவது ரயில் ஓட்டுநர்கள் ஸ்மார்ட்போன் சாதனம் பயன்படுத்தும் விதிகளில் உள்ள ஓட்டையைப் பயன்படுத்தி, ஸ்மார்ட் வாட்சிலேயே ஸ்மார்ட் ஃபோன்களைப் பயன்படுத்த உபயோகிப்பதாகக் கண்டறிந்தனர்.

ரயில் ஓட்டுநர்களுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயிலை அவர்கள் இயக்கும்போது செல்போனை பாக்கெட்டிலோ அல்லது அவர்களுக்கு அருகிலோ வைத்துக்கொள்ளக் கூடாது.

அதற்கு மாறாக செல்போனை அவர்கள் கொண்டுவரும் பையில் சுட்ச் ஆப் செய்து வைத்துக் கொள்ளலாம் என்ற விதி இருக்கிறது. இந்த விதி ஓட்டுனர்கள் கவனக் குறைவாக இருப்பதைத் தடுப்பதற்கு கொண்டு வரப்பட்டதாகும்.

நாங்கள் ஸ்மார்ட்போன் தானே பயன்படுத்தக் கூடாது, ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்தலாம் இல்லையா? என்று விதிகளிலுள்ள ஓட்டையைப் பயன்படுத்தி ரயில் ஓட்டுனர்கள் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்தி வந்துள்ளனர். தங்கள் கையில் வைத்துள்ள ஸ்மார்ட் போனுடன் ப்ளூடூத் ஸ்மார்ட் வாட்சை இணைத்து, அதன் மூலம் மெசேஜ் அனுப்புவது, போன் பேசுவது, சமூக வலைதளங்களை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை செய்து வந்துள்ளனர்.

இதையடுத்து மதுரை கோட்டப்பகுதியில் ரயில் ஓட்டுநர்கள் ரயிலை இயக்கும்போது ஸ்மார்ட் வாட்ச் அணியத் தடை விதிக்கப்பட்டு, உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.