மேட்டூர் அணை நீர்வரத்து 70 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, சாம்ராஜ் நகர், மாண்டியா உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளன.

இதையடுத்து அணைகளின் பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 37 ஆயிரம் கன அடி தண்ணீரும் என மொத்தம் 72 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

இந்த தண்ணீர் தமிழகம் நோக்கி காவிரியில் கரைபுரண்டு வந்து கொண்டிருக்கிறது. இதனால் இரு மாநில எல்லையான பிலிகுண்டுவில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வந்து சேரத் துவங்கியது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனை தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று காலை விநாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு தற்போது 70 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து இன்று காலை 95.27 அடியாக இருந்தது. அணையின் நீர் இருப்பு 58.88 டிஎம்சி ஆக உயர்ந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு மேற்கு பாசனத்திற்காக விநாடிக்கு 700 கன அடி வீதம் நீரும் திறக்கப்பட்டு வருகிறது.