கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றுக் கொண்ட பெற்றோர்

கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை பெற்றுக் கொண்டனர்... கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து மாணவி ஸ்ரீமதியின் உடல், காவல்துறையின் பாதுகாப்போடு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை இன்று காலை 7 மணிக்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப, மாணவியின் பெற்றோர் இன்று காலையிலேயே மகளின் சடலத்தைப் பெற்றுக் கொண்டனர். வன்முறை சம்பவங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மாணவி ஸ்ரீமதி உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் வந்தபோது, கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் வந்திருந்தார். அவரது முன்னிலையில் மாணவியின் உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், கார்த்திகேயன் அங்கு இருந்தனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்த நிலையில், கள்ளக்குறிச்சி முழுவதும் 1400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீமதியின் உடல் கொண்டு செல்லும் சாலைகள் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உடல் கொண்டு செல்லும் வாகனத்திற்கு முன்னும் பின்னும் போலீசார் பாதுகாப்புடன் கொண்டு செல்ல இரண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் 6 காவல் ஆய்வாளர்கள் உடன் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அரசு தலைமை மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு குறித்து வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமாரிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கேட்டறிந்தார். ஐஜி தேன்மொழி, சந்தோஷ் குமார்,சுதாகர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கடலூரில், தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உடல், சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட உள்ள நிலையில் பெரிய நெசலூர் நுழைவாயிலில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இறுதிச்சடங்குகள் இன்று நடைபெறவுள்ள நிலையில், வெளியூர் ஆட்களுக்கு அனுமதி மறுப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மாணவியின் வீட்டின் முன்பும் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிராமத்திற்கு உள்ளே செல்லும் 5 வழிகளிலும் தடுப்பு கட்டைகள் அமைத்து சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.