நொய்யல் ஆற்றில் துர்நாற்றத்துடன் மிதந்து வரும் பன்றிகள் பிணம்

ஈரோடு: நொய்யல் ஆற்றில் பன்றிகள் பிணம்... சென்னிமலை அருகே நொய்யல் ஆற்றில் பன்றிகள் பிணமாக மிதப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையம் அணை உள்ளது. இந்த அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் சாயக்கழிவு கலப்பதால், நொய்யல் ஆற்றின் இருபுறமும் உள்ள நீர்மட்டம் ஏற்கனவே மாசடைந்துள்ளது.
ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து வெளியேறி நொய்யல் ஆற்றில் கலக்கும் தண்ணீரில், இறந்த பன்றிகள் மிதப்பதாக, நொய்யல் ஆற்றின் கரையோர விவசாயிகள், கடந்த சில நாட்களாக கவலை தெரிவித்தனர். சென்னிமலை அருகே சொக்கநாதபாளையத்தில் நொய்யல் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மரங்காடு முத்துசாமி என்ற விவசாயி கூறுகையில், ‘கடந்த ஒரு வாரத்தில் முள் மரங்களில் சிக்கி இறந்த 4 பன்றிகள் தண்ணீரில் மிதந்தன.
இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் நொய்யல் ஆற்றின் கரையோரத்தில் பன்றி வளர்ப்பவர்கள் பன்றிகள் ஏதேனும் நோய் தாக்கி இறந்தால் ஆற்றில் வீசுகின்றனர். பன்றிகளின் சடலங்கள் ஒரத்துப்பாளையம் தடுப்பணையை கடந்து நொய்யல் ஆற்றில் சேரும் போது முட்செடிகளில் சிக்கி துர்நாற்றம் வீசுவதுடன் சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுகிறது.
எனவே, நொய்யல் ஆற்றில் இறந்த பன்றிகளை வீசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார். ஒரத்துப்பாளையம் அணைக்கு கடந்த சில வாரங்களாக 100 கனஅடிக்கும் குறைவாகவே தண்ணீர் வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருப்பூர் பகுதியில் பெய்த திடீர் மழையால் ஒரத்துப்பாளையம் அணைக்கு நீர்வரத்து நேற்று காலை அதிகரித்தது. வினாடிக்கு 265 கன அடி தண்ணீர் வந்தது. வழக்கம் போல் உப்பு தன்மை அதிகமாக இருந்தது. அணைக்கு வரும் தண்ணீர் நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.