இலங்கையில் கரை ஒதுங்கிய பைலட் வகை திமிங்கலங்கள்

இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள பாணதுரை கடற்கரையில் கடந்த இரு தினங்களுக்கு முன் கொத்துக்கொத்தாக பைலட் வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. ஆழமற்ற பகுதியில் திமிங்கலங்கள் வந்ததால் அவை மணற்பரப்பில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கடற்படையினர் அங்கு விரைந்து சென்று திமிங்கலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்களுக்கு உதவியாக கடலோர காவல்படை, மீட்புக் குழுவினர் மற்றும் உள்ளூர் மக்களும் களமிறங்கினர். இந்த குழுவினர் அதிரடியாக செயல்பட்டு சுமார் 100 திமிங்கலங்களை மீட்டு கடலின் ஆழமான பகுதிக்கு அனுப்பி வைத்தனர். எனினும் துரதிர்ஷ்டவசமாக 4 திமிங்கலங்கள் உயிரிழந்தன. மந்தையாக வசிக்கும் தன்மை கொண்ட திமிங்கலங்கள் எங்கு சென்றாலும் கூட்டமாகவே இடம்பெயரும். அப்படி இடம்பெயரும்போது சில நேரங்களில் ஆழமற்ற பகுதிக்கு வந்து சிக்கி உயிரிழக்கின்றன.

இப்படி திசைமாறி இடம்பெயர்வதற்கான காரணம் இதுவரை உறுதியாக கண்டறியப்படவில்லை. இலங்கையில் வழக்கத்திற்கு மாறாக இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருப்பதாக இலங்கையின் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா கடற்கரையில் சுமார் 500 திமிங்கலங்கள் கரைஒதுங்கின. இதில் மூன்றில் ஒரு பங்கு திமிங்கலங்கள் மீட்பு முயற்சியின்போது உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் வழக்கத்திற்கு மாறாக இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.