மாநில அரசுகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வட்டியின்றி கடன்; மத்திய அமைச்சர் தகவல்

வட்டியில்லாத கடன்... மாநில அரசுகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வட்டியின்றி கடனாக வழங்கப்படுவதாகவும், கடனை மாநில அரசுகள் திருப்பி செலுத்த 50 ஆண்டுகள் அவகாசம் அளிப்பதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: கொரோனா தொற்றுநோய் பொருளாதாரத்தை மோசமாக பாதித்துள்ளது. விநியோக தடைகள் ஓரளவு குறைந்துவிட்டன.

ஆனால் நுகர்வோர் தேவைக்கு இன்னும் ஊக்கமளிக்க வேண்டும். மாநில அரசுகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி வட்டியின்றி கடனாக வழங்கப்படும். கடனை மாநில அரசுகள் திருப்பி செலுத்த 50 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்படும். அரசு ஊழியர்கள் கூடுதல் பணம் செலவழிப்பதால் பொருட்களின் தேவை அதிகரித்து, வியாபாரம் ஊக்கம் பெறும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் பண்டிகை முன்பணமாக இந்தாண்டு வழங்கப்படும். ரூபே கார்டு மூலம் வழங்கப்படும் பணத்தை நிதியாண்டின் இறுதி வரை அரசு ஊழியர்கள் பெற்றுக்கொள்ளலாம். ரூ.10 ஆயிரம் முன்பணம் மாதந்தோறும் ரூ.ஆயிரம் என்ற அடிப்படையில் 10 மாதங்களில் பிடித்துக்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.