பழுதை சரிசெய்யாமல் இழுபறி செய்த ஆப்பிள் நிறுவனம்... வாடிக்கையாளருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பெங்களூர்: ரூ.1 லட்சம் இழப்பீடு… கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய ஆப்பிள் ஐபோன் 13 ரக மாடலை பழுது பார்க்காமல் இழுபறி செய்த காரணத்தால், ஆப்பிள் நிறுவனம் பாதிக்கப்பட்டவருக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள ஃப்ரேசர் டவுனில் வசிக்கும் 30 வயதான அவேஸ் கான், 2021 அக்டோபரில் ஆப்பிள் ஐபோன் 13 ரக மாடலை ஒரு வருட வாரண்டியுடன் வாங்கியுள்ளார். ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு அவர் பயன்படுத்திவந்த செல்போனில் பேட்டரி மற்றும் ஸ்பீக்கரில் சிக்கல்கள் எழுந்துள்ளது. இதனையடுத்து ஆகஸ்ட் 2022ல் அருகில் உள்ள ஆப்பிள் சேவை மையத்திற்கு அவர் சென்றுள்ளார்.

அப்போது ஆப்பிள் சேவை மையம் சார்பில் செல்போனின் சிக்கலை சரிசெய்ய முடியும் என்றும், ஒரு வாரத்தில் அவரது தொலைபேசி திரும்பப் பெறப்படும் என்றும் அவரிடம் கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு பிரச்சினை சரி செய்யப்பட்டுவிட்டதாகவும், அவர் வந்து தனது ஆப்பிள் ஐபோனை எடுத்துக் கொள்ளலாம் என சேவை மையத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆப்பிள் சேவை மையத்திற்கு சென்ற அவேஸ் கான் தனது செல்போன் முழுமையாக செயல்படவில்லை என்றும், குறைகள் இருப்பதை கண்டறிந்துள்ளார். இதனால், செல்போனை மீண்டும் பழுது பார்க்க வேண்டும் என்று சேவை மையத்திடம் கூறியுள்ளார். ஆனால் அவேஸ் கானுக்கு சேவை மையம் சார்பில் இரண்டு வாரங்களாக பதிலளிக்காமல் இருந்துள்ளனர்.

அதன்பின்னர் பல நாட்கள் கழித்து தொடர்பு கொண்ட ஆப்பிள் சேவை மைய அதிகாரி, அவேஸ் கான் பழுதுக்கு கொடுத்துள்ள செல்போனில் பசை போன்ற பொருள் இருப்பதாகவும் இதனை ஒரு வருட வாரண்டியின் கீழ் சரிசெய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மின்னஞ்சல் மூலமாக பல புகார்களை அவேஸ் கான் ஆப்பிள் சேவை மையத்திற்கு அனுப்பியுள்ளார். ஆனால், முறையாக பதில் அவருக்கு அளிக்கப்படவில்லை.

இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் அவேஸ் கான் வழக்குப்பதிவுச் செய்தார். இவ்வழக்கு கடந்த பத்து மாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், வாடிக்கையாளர் அவேஸ் கானுக்கு ஆப்பிள் நிறுவனம் 79 ஆயிரத்தி 900 ரூபாயை வட்டி தொகையான ரூபாய் 20 ஆயிரத்துடன் சேர்த்து வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.