அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட், முன்எப்போதும் இல்லாத பட்ஜெட்டாக இருக்கும் - நிர்மலா சீதாராமன்

இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் நேற்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியபோது, அடுத்த நிதியாண்டுக்கான (2021-2022) மத்திய பட்ஜெட், வருகிற பிப்ரவரி 1-ந் தேதி தாக்கல் செய்யப்படும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டவும், வளர்ச்சியை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது என்று கூறினார்.

எனவே, தொழில்துறையினர் தங்கள் யோசனைகளை எனக்கு அனுப்பி வையுங்கள். அதன்மூலம் இதற்கு முன்பு இல்லாத பட்ஜெட்டை தயாரிக்க முடியும். இதுபோல், ஒரு பெருந்தொற்றுக்கு பிறகு தயாரிக்கப்படும் பட்ஜெட்டை கடந்த 100 ஆண்டு கால இந்தியா பார்த்திருக்காது என நிர்மலா தெரிவித்தார்.

தொழில்துறையினரின் யோசனைகளை பெறாமல் இது சாத்தியம் இல்லை. அவர்களது விருப்ப பட்டியல் இல்லாமல், முன்எப்போதும் இல்லாத பட்ஜெட்டை என்னால் தயாரிக்க முடியாது.வளர்ச்சிக்கு புத்துயிரூட்ட கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ஆதரவு அளிக்கப்பட வேண்டும் என நிகழ்ச்சியில் நிர்மலா பேசினார்.

மேலும் அவர், நமது பரப்பளவு, மக்கள்தொகை, பொருளாதாரத்தை கட்டமைக்கும் திறன் ஆகியவற்றை வைத்து பார்க்கும்போது, சர்வதேச வளர்ச்சிக்கான எந்திரமாக இந்தியா திகழும். சர்வதேச பொருளாதாரம் மீண்டு வருவதற்கு இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்று தயக்கமின்றி சொல்வேன் என்று கூறினார்.