மத்திய பா.ஜனதா அரசு என் மீது கோபத்தில் உள்ளது - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் தற்போது விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்துக்காக நுழைந்திருக்கும் பஞ்சாப் மாநில விவசாயிகளை கைது செய்து அடைத்து வைப்பதற்காக டெல்லியில் உள்ள அரங்கங்களை கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டது.

ஆனால் தங்கள் அரங்குகளை தற்காலிக சிறைகளாக மாற்றுவதற்கு அனுமதிக்க முடியாது என டெல்லி அரசு தெரிவித்தது. இதனால் மத்திய அரசு தனது மீது கோபத்தில் இருப்பதாக டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் நேற்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், டெல்லியில் உள்ள அரங்குகளை தற்காலிக சிறைகளாக மாற்றுவதற்கு கடந்த வாரம் டெல்லி ஆம் ஆத்மி அரசு மறுத்தது. எனவே மத்திய பா.ஜனதா அரசு என் மீது கோபத்தில் உள்ளது என்று கூறினார்.

மேலும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக தன் மீது பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் குற்றம் சாட்டுவதையும் அவர் கடுமையாக விமர்சித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், கேப்டன் சாப் (அமரிந்தர் சிங்) என் மீது குற்றம் சாட்டுவதுடன், பா.ஜனதாவின் மொழியில் பேசுகிறார். வேளாண் சட்டங்களுக்காக என் மீது அவர் குற்றம் சாட்டுகிறார் என்று கூறினார்.

மேலும் அவர், இதுபோன்ற சிக்கலான நேரத்தில் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுவது ஏன்? இந்த சட்டங்களை தடுப்பதற்கு அமரிந்தர் சிங்குக்கு பல வாய்ப்புகள் இருந்தன. ஆனால் அவர் அதை மேற்கொள்ளவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.