லெபனானில் நிவாரணமாக வந்த டீத்தூளை பாதுகாவலர்களின் குடும்பத்திற்கு கொடுத்த அதிபர்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த மாதம் 4-ம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதில் 190-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். மேலும், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளை இழந்தனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டு, உறவுகள், உடைமைகளை இழந்தவர்களுக்கு பிரான்ஸ், இந்தியா போன்ற உலகின் பல நாடுகள் பல்வேறு உதவிகளை செய்தன.

லெபனான் வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை தனது நாட்டில் இருந்து 1,675 கிலோ கிராம் அளவில் உயர்ரக டீத்தூளை வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க முன்வந்தது. லெபனானுக்கான இலங்கைத்தூதர் கடந்த 24 ஆம் தேதி அதிபர் மைக்கிலிடம் இந்த தேயிலைத்தூளை வழங்கியதாக புகைப்படத்துடன் லெபனான் அதிபர் மாளிகை செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் லெபனான் அதிபர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்தியில், இலங்கை அரசால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட டீத்தூளை ராணுவம் பெற்றுக்கொண்டார். இவை அதிபர் மைக்கிலின் பாதுகாவளர்கள் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டுவிட்டது. மேலும், டீத்தூளை அன்பளிப்பாக வழங்கிய இலங்கை அதிபருக்கு லெபனான் அதிபர் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வெடிவிபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசால் நிவாரணமாக வந்த டீத்தூளை தனது பாதுகாவலர்களின் குடும்பத்திற்கு வழங்கியது தொடர்பாக பொதுமக்களும், எதிர்கட்சிகளும் அதிபர் மீது குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக ’டீதிருடன்’ என்ற ஹேஸ்டேக் லெபனானின் சமூகவலைதளங்களில் டிரண்ட் ஆக மாறி பலரும் லெபனான் அதிபருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.