வடகிழக்கு பருவமழை இதுவரை 43% குறைவாக பெய்துள்ளது


சென்னை: கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து கொண்டு வருகிறது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், 123 ஆண்டுகளில் 9-வது முறையாக அக்டோபரில் வடகிழக்கு மழை குறைவாக பெய்துள்ளது. நடப்பாண்டில் 171 மி.மீ. மழை பெய்ய வேண்டிய நிலையில், தற்போது வரை 98 மி.மீ. மழை பெய்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், வங்கக் கடல் மற்றும் இலங்கை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, அடுத்த மூன்று நாட்களுக்கு மழையின் தீவிரம் வேகமெடுக்கும். நடப்பு பருவத்தில் இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 43% குறைவாக பெய்து உள்ளது.

ஆனால், தமிழகத்தில் வரும் நாட்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என பாலச்சந்திரன் கூறியுள்ளார்.மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.இதையடுத்து தற்போதைக்கு, மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை. தமிழகத்தின் திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.