குயின் எலிசபெத்-2 கப்பலை அடுத்த மாதம் முதல் பொதுமக்கள் பார்வையிடவும், பயன்படுத்தவும் அனுமதி

கடந்த 1967-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டில் குயின் எலிசபெத்-2 கப்பல் முதன்முதலாக உருவாக்கப்பட்டது. இதுவரை இந்த கப்பல் 25 முறை உலகை சுற்றி வந்து சாதனை படைத்துள்ளது. பல்வேறு நாடுகளில் பயணம் செய்த இந்த கப்பல் கடந்த 2007-ம் ஆண்டு துபாய் அரசு முதலீட்டு நிறுவனத்தால் இங்கிலாந்து நாட்டில் இருந்து விலைக்கு வாங்கப்பட்டது. பின்னர் இந்த கப்பல் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி இங்கிலாந்து நாட்டில் இருந்து பிரியா விடை பெற்று துபாயின் ராஷித் துறைமுகத்திற்கு வந்தது.

துபாய் அரசு முதலீட்டு நிறுவனத்தின் சார்பில் சீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று ஓட்டல் மற்றும் பொழுதுபோக்கு மையமாக மாற்றப்பட்ட இந்த கப்பலில் உள்ள சினிமா அரங்கில் ஒரே நேரத்தில் 481 பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்கலாம். இந்த கப்பல் 2 ஆயிரத்து 720 அடி நீளம் கொண்டதாகும். மொத்தம் 7 தளங்களில் 13 அடுக்குகளை கொண்ட உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பயணிகளுக்காக கட்டப்பட்ட 224 சொகுசு அறைகள் உள்ளது.

இந்த கப்பலில் பல்வேறு நாடுகளின் உணவுகளை சாப்பிடுவதற்கு 13 உணவகங்களும் உள்ளது. கப்பலின் நடுவே பால் ரூம் எனப்படும் பிரமாண்ட அரங்கம் உள்ளது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகள், திருமண வரேவேற்பு போன்றவைகளை நடத்தலாம். இந்த பகுதியில் ஒரே நேரத்தில் 650 பேர் கூடும் அளவு வசதி செய்து தரப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் கொரோனா கட்டுப்பாடு காரணமாக அமீரகத்தில் இந்த கப்பல் மூடப்பட்டது. தற்போது துபாய் சுற்றுலாத்துறை, பொருளாதாரத்துறை, மாநகராட்சி ஆகியவை அளித்த அனுமதி முத்திரையை அடுத்து அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் மீண்டும் பொதுமக்கள் பார்வையிட இந்த கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.