இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது

டெல்லி: உச்ச நீதிமன்றம் கேள்வி... கிறிஸ்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின்படி, பட்டியல் சாதி கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு ஏன் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கிறித்துவ மற்றும் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பட்டியல் சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரிய வழக்கை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்தது.

அப்போது, பழங்காலத்திலிருந்தே பட்டியலின மக்கள் தீண்டாமையால் அவதிப்பட்டு வருவதாகவும், இடஒதுக்கீடு வழங்குவதற்கு மதம் தடையாக இருக்கக் கூடாது என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையை அப்படியே ஏற்க முடியாது என்றும், தற்போதைய சூழலில் கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பல்வேறு கமிஷன்களின் முடிவுகளில் இடஒதுக்கீட்டை பரிந்துரைத்தது ஏன், அதை ஏன் அமல்படுத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், மதமாற்றத்துக்குப் பிறகும் சமூக விலக்குகள் தொடர வாய்ப்புள்ளதாகக் கூறிய நீதிபதிகள், அரசியல் சாசன அம்சங்களை கருத்தில் கொண்டு பாராமுகமாக இருக்க முடியாது என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர்.