புளியம்பேட்டில் மாணவர்களின் வசிப்பிடத்திற்கு சென்று பாடம் நடத்தும் ஆசிரியை

மாணவர்களின் வசிப்பிடத்திற்கு சென்று பாடம் நடத்தும் ஆசிரியை... கொரோனா முன்னெச்சரிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூரில் மாணவர்களின் வசிப்பிடப் பகுதிகளுக்கே சென்று அவர்களை ஒன்று திரட்டி, அரசுப் பள்ளி ஆசிரியை ஒருவர் பாடம் நடத்தி வருகிறார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்த மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவேற்காடு அடுத்த புளியம்பேட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வரும் எழிலரசி எனும் ஆசிரியை, அப்பள்ளி மாணவர்களின் வசிப்பிடப் பகுதிக்கே சென்று பெற்றோர்களின் அனுமதியுடன் மாணவர்களை ஒன்று திரட்டி குறிப்பிட்ட இடத்தில் பாடம் நடத்தி வருகிறார்.

நாள் ஒன்றிற்கு இரண்டு மணி நேரத்திற்கு பாடம் நடத்தும் ஆசிரியை, வகுப்பு தொடங்குவதற்கு முன்பாக, சானிடைசர் வழங்கி மாணவர்களின் கைகளை கழுவுச் செய்வதோடு, தனிமனித இடைவெளியையும் பின்பற்றி பாடம் நடத்தி வருகிறார். 3 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கும் என்பதால், இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஆசிரியை எழிலரசி தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் உடல் மற்றும் எதிர்கால நலன் கருதி அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று பாடம் நடத்துவதாக ஆசிரியை விளக்கமளித்துள்ளார். ஆனால், எந்தவொரு சூழலிலும் கொரோனா தொற்றால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் பள்ளிகள் இயங்க அரசு தொடர்ந்து தடை விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.