உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா இன்று தொடக்கம்

விஜயதசமியையொட்டி ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் தசரா விழா, கர்நாடக மாநிலத்தின் பண்டிகையாக அரசால் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மைசூரு தசரா விழா கர்நாடகத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. மகிஷாசூரன் எனும் அரக்கனை மைசூருவின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் வெற்றி கொண்ட நாளைத்தான் மைசூரு தசரா விழாவாக மக்கள் கொண்டாடி வருவதாக சொல்லப்படுகிறது.

மகிஷாசூரனின் பெயரில் இருந்துதான் மகிசூர் என்று மைசூரு அழைக்கப்பட்டு வந்ததாகவும், தற்போது அந்த பெயர் மருவி மைசூரு என்று மாறியுள்ளதாகவும் வரலாறு கூறுகிறது. மைசூரு தசரா விழா விஜயநகரப் பேரரசர்களால் கடந்த 15-ம் நூற்றாண்டில் இருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு மைசூருவை ஆட்சிபுரிந்த உடையார் வம்ச அரசர் ராஜ உடையார் தசரா விழாவை ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் கொண்டாட ஆரம்பித்தார். தசரா கொண்டாட்டங்கள் கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் இருந்துதான் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மைசூரு தசரா விழா கொண்டாட்டங்கள் நடைபெறும் 10 நாட்களும் மைசூரு அரண்மனை வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்படும். இளைஞர் தசரா, கிராமிய தசரா, விவசாயிகள் தசரா, குழந்தைகள், பெண்கள் தசரா இப்படி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். மேலும் மலர் கண்காட்சி, விளையாட்டு போட்டிகள், சாகச நிகழ்ச்சிகள், ஹெலிகாப்டர் ரைடு இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்களும் இடம்பெற்று இருக்கும். மைசூரு தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியே ஜம்பு சவாரி ஊர்வலம்தான். இந்த நிகழ்ச்சி சாமுண்டீஸ்வரி அம்மன் போருக்கு தயாராகி படை வீரர்களுடன் போர்க்களத்திற்கு சென்று மகிஷாசூரனை வதம் செய்வதை நினைவூட்டும் விதமாக நடத்தப்படும்.

இப்படி கோலாகலமாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் மைசூரு தசரா விழா இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மிகவும் எளிமையாக நடத்த அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தசரா விழா அக்டோபர் மாதம் 17-ந் தேதி(இன்று) தொடங்கி 26-ந் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா போரில் முன்களத்தில் நின்று போராடி வரும் ஒருவருக்குத்தான் தசரா விழாவை தொடங்கி வைக்க வாய்ப்பு வழங்கப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில் கொரோனா போராளியான டாக்டர் மஞ்சுநாத்துக்கு இந்த ஆண்டு தசரா விழாவை தொடங்கி வைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது