ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வியாபாரி தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடன் தொல்லையில் வியாபாரி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 36). இவருக்கு மதுமிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் தனியார் செல்போன் ரீசார்ஜ் கூப்பன் வினியோகஸ்தர் தொழில் செய்துவந்தார். இந்த நிலையில் ஆன்லைன் சூதாட்டம் பற்றி அறிந்த விஜயகுமார் அதில் விளையாட தொடங்கினார். தொடக்கத்தில் விஜய குமார் வெற்றி பெற்று பணம் சம்பாதித்ததால் சூதாட்டத்தின் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதனை விளையாடி வந்ததில் சிறுகச்சிறுக பணத்தை இழந்தார். ஒரு கட்டத்திற்கு சூதாட்டத்தில் இருந்து வெளியே வர முடியாமல் அடிமையானார்.

வீட்டில் இருந்த மனைவியின் நகைகள் மற்றும் வியாபாரத்திற்கு வைத்திருந்த பணத்தை அதில் இழந்தார். மேலும் பலரிடம் கடன் பெற்று சூதாட்டத்தில் ஈடுபட்டார். இவ்வாறு பல லட்சங்களை ஆன்லைன் சூதாட்டத்தில் விஜயகுமார் இழந்தார்.

இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள், பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர். பணம் இல்லாததால் தொழிலை சரியாக நடத்த முடியவில்லை. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே மனைவியிடம் கோபித்துகொண்டு விஜயகுமார் வீட்டைவிட்டு வெளியே சென்றார்.

நீண்ட நேரமாகியும் அவர் வராததால், குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். கணவர் பற்றிய தகவல் தெரியாததால் கவலை அடைந்த மதுமிதா நேற்று காலை கரிக்கலாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றார். அப்போது கோர்க்காடு அருகே உள்ள நத்தமேடு ஏரிக்கரையில் ஆண் பிணம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பிணத்தின் அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று நின்றது.

அதனுடைய பதிவு எண் கொண்டு விசாரித்தபோது, அது விஜயகுமாருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிள் என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விஜயகுமாரின் செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதனால் ஏற்பட்ட கடன் தொல்லையால் அவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது தெரியவந்தது.