ஐ.நா., அமைதிப்படையில் பணியாற்றி உயிர் தியாகம் செய்த 5 இந்தியர்களுக்கு விருது

அமைதிப்படையில் பணியாற்றிய போது, உயிர் தியாகம் செய்த ஐந்து இந்தியர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை, விருது வழங்கி கவுரவிக்க உள்ளது.

உலகில், உள்நாட்டுப் போர், இனக்கலவரம் உட்பட பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படும் நாடுகளில், அமைதியை ஏற்படுத்த, ஐ.நா., அமைதிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படையில், இந்திய வீரர்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஐ.நா., அமைதிப் படையில் பணியாற்றிய, ராணுவம், போலீஸ் ஆகியவற்றைச் சேர்ந்த, 83 பேர், கடந்த ஆண்டு இறந்தனர். இவர்களுக்கு, கவுரவுமிக்க, 'டைக் ஹைமர்சோல்டு' பதக்கம் வழங்கப்பட உள்ளது. இவர்களில், ஐந்து இந்தியர்களும் இடம் பெற்றுள்ளனர்.

தெற்கு சூடானில், பணியாற்றிய மேஜர் ரவி இந்தர் சிங் சந்து, சார்ஜென்ட் லால் மனோட்ர தர்செம், லெபானனில் பணியாற்றிய சார்ஜென்ட் ரமேஷ் சிங், காங்கோவில் பணியாற்றிய ஜான்சன்பெக், எட்வர்டு அகாபிட்டோ பின்டோ ஆகியோர், கடந்த ஆண்டு இறந்தனர். இவர்கள் உட்பட, 83 பேருக்கும். ஐ.நா., அமைதிக்குழுவின் சர்வதேச தினமான நாளை, விருது வழங்கப்பட உள்ளது.