அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சந்திப்பு

ஜனாதிபதியுடன் சந்திப்பு... அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, இன்று (புதன்கிழமை) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இலங்கையை வந்தடைந்தார்.

வலுவான இறையாண்மையுள்ள இலங்கையுடன் கூட்டு சேர்வதற்காக ஐக்கிய அமெரிக்காவின் அர்ப்பணிப்பை வலியுறுத்துவதே அவரது இந்த விஜயத்தின் நோக்கம் என கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்திருந்தது.

சுதந்திரமானதும் வௌிப்படையானதுமான இந்திய வலயத்திற்கான பொது நோக்கத்தை முன்னோக்கி கொண்டு செல்லவே அமெரிக்க இராஜாங்க செயலாளர் எதிர்பார்ப்பதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டது.

அதன்படி இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ள இராஜாங்க செயலாளர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். குறித்த உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளின் பின்னர் அவர் கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கு செல்லவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.