பூங்கா ஊழியர்கள் 28 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய வால்ட் டிஸ்னி நிறுவனம் முடிவு

உலகின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு பூங்கா வால்ட் டிஸ்னி பூங்காக்கள் கலிபோர்னியா, புளோரிடா, பாரீஸ், டோக்கியோ, ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகிய இடங்களில் உள்ளது. வழக்கமாக இந்த பூங்காக்களில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் வருகைபுரிவதுண்டு. இந்த வால்ட் டிஸ்னி பூங்காவில் மக்கள் கொண்டாடங்கள் மிகுந்து காணப்படும்.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த வால்ட் டிஸ்னி பூங்கா மூடப்பட்டிருந்தது. இதனால், பல கோடி கணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், பூங்காவில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், புளோரிடாவில் உள்ள வால்ட் டிஸ்னி பூங்கா கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் திறக்கப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பூங்காவில் மக்கள் வருகை பெருமளவு குறைந்துள்ளது. மேலும், எஞ்சிய பூங்காக்கள் இன்னும் திறக்கப்படாததால் அந்நிறுவனம் பல கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. தற்போது, நிலைமையை சமாளிக்கும்வகையில் உலகம் முழுவதும் தனது பூங்காக்களில் வேலை செய்துவரும் ஊழியர்களில் 28 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய வால்ட் டிஸ்னி முடிவு செய்துள்ளது.

பணிநீக்கம் செய்யப்படுவர்களில் அனைவரும் அமெரிக்காவில் உள்ள வால்ட் டிஸ்னி பூங்காக்களில் வேலை செய்பவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஊழியர்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர். 28 ஆயிரம் ஊழியர்களின் பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பு விரைவில் முறைப்படி வெளியிடப்படும் என வால்ட் டிஸ்னி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.