ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 50 ஆயிரம் கனஅடியாக உயர்வு

பென்னாகரம்: கர்நாடக, கேரளா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் மிக தீவிரமடைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்தது. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 19 ஆயிரத்து 590 கனஅடிநீரும், கபினி அணையில் இருந்து 6 ஆயிரத்து 896 கனஅடிநீரும் திறக்கப்பட்டது.

இதை அடுத்து இந்த இரு அணைகளில் இருந்து மொத்தம் 26 ஆயிரத்து 486 கனஅடிநீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான ஓசூர், அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல், கேரட்டி, நாட்றாம் பாளையம் உள்பட பல இடங்களில் கனமழை பெய்தது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று காலை 45 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 50 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது. நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருவதால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஒகேனக்கலில் உள்ள அனைத்து அருவிகளும் மூழ்கியுள்ளது.

மேலும் சில பகுதிகள் தண்ணீர் சூழ்ந்து தீவு போல காட்சி அளிக்கிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 24-வது நாளாக தடை விதித்துள்ளது. போலீசார், தீயணைப்பு படையினர், வருவாய் துறையினர் ஒகேனக்கல் காவிரி கரையோர பகுதியில் மிக தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.