டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு; மேட்டூர் அணை நீர்மட்டம் 26½ அடி குறைந்து

மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். மேட்டூர் அணை மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, நாகை, கடலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு மேல் இருந்ததால் அன்றைய தினம் காவிரி டெல்டா பாசனத்திற்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அன்று முதல் தொடர்ச்சியாக 300 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் குறையாமல் நீடித்து வந்தது.

இதையடுத்து இந்த ஆண்டு கடந்த மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அன்றைய தினம் அணை நீர்மட்டம் 101.72 அடியாக இருந்தது. இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்ததால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென குறைய தொடங்கியது.

குறிப்பாக கடந்த மாதம் 15-ந் தேதி 100.18 அடியாக இருந்த நீர்மட்டம் 31 நாட்களில் நேற்று 73.62 அடியாக குறைந்தது. அதாவது ஒரே மாதத்தில் அணை நீர்மட்டம் சுமார் 26½ அடி குறைந்துள்ளது. நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 199 கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. இதன்காரணமாக அணை நீர்மட்டம் மேலும் மளமளவென குறையும் சூழலே உள்ளது.