பெய்ரூட்டில் நடந்த சம்பவத்தில் வெளிநாடுகள் தொடர்பா; விசாரணை நடக்கும் என அறிவிப்பு

விசாரணை நடைபெறும்... லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் 2700 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து 154 பேர் உயிரிழந்த சம்பவத்தில் வெளிநாடுகளின் பங்கு தொடர்பாக விசாரணை நடைபெறும் என அதிபர் மைக்கேல் அவுன் அறிவித்துள்ளார்.

பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டிருந்த 2,700 டன் அம்மோனியம் நைட்ரேட் செவ்வாயன்று வெடித்து சிதறியது. விபத்து என நம்பப்படும் இச்சம்பவத்தால் பெய்ரூட் நகரமே அதிர்ந்தது. லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. 154 பேர் உயிரிழந்தனர். 5,000 பேர் காயமடைந்தனர்.

வீடுகளை இழந்தவர்கள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். பெய்ரூட் வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய வெடிப்பு தொடர்பாக வெள்ளிக்கிழமை விசாரணை தொடங்கியுள்ளனர். இது குறித்து பேட்டியளித்த அதிபர் மைக்கேல் அவுன் கூறியிருப்பதாவது:

இச்சம்பவத்திற்கான காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. வெளிநாடுகள் ராக்கெட் அல்லது வெடிகுண்டு அல்லது பிற செயல்கள் மூலம் தாக்குதல் நடத்தியிருக்க வாய்ப்பு உள்ளது. அலட்சியம் காரணமாக விபத்து ஏற்பட்டதா என்றும் விசாரணை நடைபெறுகிறது. 20 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க இயக்குனரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அதிபர் கூறியுள்ளார்.

லெபானானுடன் பல போர்களில் சண்டையிட்ட இஸ்ரேல் இச்சம்பவத்தில் தங்கள் நாட்டுக்கு எந்த பங்கும் இல்லை என மறுத்துள்ளது. இச்சம்பவத்திற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என கூறியுள்ள துருக்கி அதிபர் எர்டோகன், 2005-ல் லெபனான் பிரதமர் ரபிக் அல்-ஹரிரி ஒரு குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட நிகழ்வோடு இதனை ஒப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவும் இச்சம்பவம் ஒரு தாக்குதலாக இருக்கக்கூடும் என கூறியுள்ளது.