சேலம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண் தூக்கிட்டு தற்கொலை

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாது தமிழகத்தில் நோய் தொற்று குறித்த பயத்தால் நோயாளிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,11,151 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 62,778 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,510-ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 68,254 ஆக அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 1,247 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 400 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், சேலம் அரசு மகளிர் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒன்பதாம் பாலி பகுதியை சேர்ந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெண்ணின் உறவினருக்கு கொரோனா உறுதியானதால் முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தனிமைப்படுத்தப் படுகிறவர்கள் இது போன்று தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனை வழங்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.