கறிவேப்பிலை குழம்பு வைப்பது எப்படி என்று தெரியுங்களா?

சென்னை: கறிவேப்பிலை வாசனைக்கு மட்டுமில்லைங்க... அதில் குழம்பு வைத்து சாப்பிட்டு இருக்கீங்களா. இதோ அந்த செய்முறை உங்களுக்காக.

தேவையானவை: கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு, மிளகு - 10, காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், புளி - சிறிய எலுமிச்சைப் பழ அளவு, எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலையை வதக்கிக்கொள்ளவும். அதே வாணலியில் மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு ஆகியவற்றை வறுத்துக்கொள்ளவும்.

இவற்றுடன் புளியை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து தேவையான உப்பு சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கரைத்து வைத்ததை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

சூடான சாதத்துடன் சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். சுட்ட அப்பளம் இதற்கு சிறந்த காம்பினேஷன்.