அருமையான ருசியில் கதம்ப சாம்பார் செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: அருமையான ருசியில் கதம்ப சாம்பார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:

துவரம்பருப்பு - 150 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 3
கத்திரிக்காய் - 3
பீன்ஸ் - 50 கிராம்
தக்காளி - 4
முருங்கைக்காய் - 1
சௌசௌ - 1
அவரைக்காய் - 50 கிராம்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
பொடித்த வெல்லம்,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

கடுகு - சிறிதளவு
உளுந்து - ஒரு டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
நெய் - 25 கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு

அரைக்க:

காய்ந்த மிளகாய் - 7
தனியா (மல்லி) - 3 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு - அரை டேபிள்ஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
தேங்காய் - கால் மூடி

செய்முறை: துவரம் பருப்பை கழுவி சுத்தம் செய்து சிறிது உப்பு சேர்த்து குக்கரில் வேக வைத்துக்கொள்ளவும். காய்களை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருள்களை லேசாக வறுத்து தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் பேஸ்ட் போன்று அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி உருகியதும் கடுகு, உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

இத்துடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய காய்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி, மஞ்சள்தூள் சேர்த்து கரைய வதக்கி, அரைத்த பேஸ்ட் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.

இத்துடன் கரைத்த புளித் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். காய்கள் வெந்ததும் வேகவைத்த பருப்பைச் சேர்த்து கொதிக்க விடவும். இறக்கும்போது பொடித்த வெல்லம், கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.