அருமையான சுவையில் மசாலா சப்பாத்தி செய்முறை உங்களுக்காக!!!

சென்னை; இட்லி, தோசை, பூரி, பொங்கல் என்று ஒரேவிதமான டிஃபன் சாப்பிட்டு போர் அடிக்குதா? அப்போ மசாலா சப்பாத்தி என்னும் கார சப்பாத்தி செய்து பாருங்கள். இந்த சப்பாத்தி மசாலாப் பொருட்கள் சேர்த்து செய்வதாகும்.

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இதை சுலபமாக செய்து விடலாம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 200 கிராம்
ஓமம் - 2 ஸ்பூன்
கரம் மசாலாப் பொடி - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் வற்றல் பொடி - 3ஃ4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்
கஸ்தூரி மேத்தி - 2 டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - தேவையான அளவு
புதினா இலை - தேவையான அளவு
கடலை எண்ணெய் - தேவையான அளவு

மசாலா சப்பாத்தி செய்முறை: கோதுமை மாவினை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் கல் மற்றும் தூசி நீக்கிய ஓமம், கரம் மசாலா பொடி மற்றும் இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் புதினா இலை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். அதில் மல்லி பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் கஸ்தூரி மேத்தி மற்றும் நெய் சேர்க்க வேண்டும். எல்லாப் பொருட்களையும் கோதுமை மாவுடன் நன்கு ஒருசேரக் கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து சப்பாத்தி மாவுப் பதத்தில் சற்று தளர்வாகப் பிசைய வேண்டும். திரட்டிய மாவின் மேல்பகுதி காயாமல் இருக்க லேசாக எண்ணெய் தடவிக் கொள்ள வேண்டும்.

ஈரத்துணியால் மாவினை போர்த்தி அரைமணி நேரம் வைத்திருக்க வேண்டும். பின்னர் மாவினை சிறிது உருண்டைகளாக்க வேண்டும்.
சிறிய உருண்டையின் மீது கோதுமை மாவினைத் தூவி மெல்லிய சப்பாத்திகளாக விரிக்க வேண்டும். சப்பாத்தி கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடானதும் அதில் விரித்த சப்பாத்தியை சேர்த்து எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

அடுப்பின் தீயைக் குறைக்கமால் சப்பாத்தியை வேக வைத்து எடுக்கவும். அப்போதுதான் சப்பாத்தி வெந்து மிருதுவாக இருக்கும். அவ்வளவு தான். அட்டகாசமான சுவையில் மசாலா சப்பாத்தி ரெடி..!